மலைரெயிலில் பயணிக்க அலைமோதிய கூட்டம்
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மலைரெயிலில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.
ஊட்டி
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மலைரெயிலில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.
மலைரெயில்
கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலைரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வார நாட்களான திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் இருக்கைகள் நிரம்பாமல் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலைரெயிலில் அனைத்து இருக்கைகளும் நிரம்புகிறது. இதனால் சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போகிறது.
அலைமோதிய கூட்டம்
இதற்கிடையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. பின்னர் சீரமைப்பு பணி முடிந்து நேற்று மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் மலைரெயிலில் செல்லும்போது குகைகளை கடப்பது, பசுமையான தேயிலை தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் போன்றவற்றை கண்டு ரசித்தனர். காட்சிக்கு வைக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரெயில் நீராவி என்ஜினை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
முன்பதிவு இல்லாத பெட்டி
மலை ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் செய்கிறவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்து பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிக்க முடியாது. முதலில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு தனியாக பெட்டி இருக்கும். தற்போது அந்த பெட்டி இணைப்பு இல்லை.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மலைரெயிலில் முன்பதிவு செய்யாதவர்களும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகளுக்காக மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி முதல் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்து உள்ளனர் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.