தேனி மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் 60,680 டோஸ் ஒதுக்கீடு
தேனி மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதற்காக 60,680 டோஸ் ஒதுக்கீடு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. 5-வது மெகா தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இதற்காக 51 ஆயிரத்து 460 டோஸ் கோவிஷீல்டு, 9 ஆயிரத்து 220 டோஸ் கோவேக்சின் என மொத்தம் 60 ஆயிரத்து 680 டோஸ் கொரோனா தடுப்பூசி, முகாம்கள் நடக்கும் இடங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி முகாம்கள் குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மாவட்ட கலெக்டர் முரளிதரன் போடி, ஆண்டிப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.