சென்னையில் 95 சதவீதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிவு - ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னையில் 95 சதவீதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்குட்பட்ட மூலக்கொத்தளம், கொடுங்கையூர், பேசின் பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களையும் அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்வடிகால் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 696 கி.மீ அளவுக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதில் தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (நேற்று) திரு.வி.க நகர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. பக்கிங்காம் கால்வாயை பொறுத்தவரையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், அவர்களும் கால்வாயில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக உருவாகும் கட்டிடங்களால் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் தண்ணீர் தேங்கும் இடங்கள் மாறுபடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் பிரத்தியேகமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து, தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம்.
மேலும் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியிடம் 507 ராட்சத மோட்டார்கள் கைவசம் இருக்கிறது. கையிருப்பில் உள்ள மோட்டார்கள் சரியான நிலையில் இயங்குகிறதா என்பதை ஒவ்வொரு மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல் மண்டலத் துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
எந்த குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி விடக்கூடாது என்பதுதான் சென்னை மாநகராட்சியின் நோக்கம். அதற்கான பணிகளை தான் சென்னை மாநகராட்சி முன்னெடுத்து நடத்தி வருகிறது. மேலும் கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்ததோ அந்த இடங்களில் இன்னும் 15 முதல் 20 நாட்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த மாதம் 12-ந்தேதி நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 பேருக்கும், 19-ந்தேதி நடைபெற்ற 2-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும், 26-ந்தேதி நடைபெற்ற 3-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 627 தடுப்பூசிகளும் மற்றும் 4-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,58,144 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 7-ந்தேதி வரை சென்னையில் மொத்தம் 54 லட்சத்து 37 ஆயிரத்து 635 தடுப்பூசிகளும், தனியார் ஆஸ்பத்திரிகளின் மூலமாக 10 லட்சத்து 63 ஆயிரத்து 837 தடுப்பூசிகள் என மொத்தம் 65 லட்சத்து ஆயிரத்து 472 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் நாளை (10-ந்தேதி) 5-வது முறையாக 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
சென்னையில், தற்போது 3 லட்சத்து 35 ஆயிரத்து 810 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1 லட்சத்து 86 ஆயிரத்து 20 கோவேக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 5 லட்சத்து 21 ஆயிரத்து 830 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.