ஆழ்வார்குறிச்சி அருகே பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை தந்தையின் மதுப்பழக்கத்தால் மனமுடைந்தார்
பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே, தந்தை மதுப்பழக்கத்தால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவர்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மைலப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.
மூத்த மகன் ஸ்ரீகணேஷ் (வயது 15). பள்ளக்கால்பொதுக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். 2-வது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறாா். லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. பின்னர் மகன் ஸ்ரீகணேஷ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க லட்சுமணன் சுமார் 4 வருடங்களாக குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தினார். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் மது வாங்கிக் கொடுக்க, லட்சுமணன் மீண்டும் மது குடித்துள்ளார். தந்தையின் மதுகுடிக்கும் பழக்கத்தை அறிந்த ஸ்ரீகணேஷ் வேதனையடைந்து கடந்த 7-ந்தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீகணேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.