சேலத்தில் பரிதாபம்:அக்காள்-தங்கை தற்கொலை-போலீசார் விசாரணை

சேலத்தில் அக்காள்-தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-10-08 21:38 GMT
சேலம்:
சேலத்தில் அக்காள்- தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அக்காள்- தங்கை
சேலம் வீராணம் அருகே வாய்க்கால்பட்டறை காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லட்சுமி (வயது 65). லட்சுமியின் தங்கை சரஸ்வதி (63). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஒரு ஜவுளி நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
சந்திரன் இறந்த பிறகு, அக்காள், தங்கை இருவரும் தனியாக வசித்து வந்தனர். வயது மூப்பின் காரணமாக இருவருக்கும் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இறந்து கிடந்தனர்
இருவரையும் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டனர். நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் தூங்கினர். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை.
இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வாயில் நுரை தள்ளியபடி 2 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
தற்கொலை
அவர்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தோம். சிகிச்சை பெற்றும் நோய் குணம் ஆகவில்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் இறுதிச்சடங்கிற்காக வீட்டில் பணம் வைத்து இருக்கிறோம். அதைக்கொண்டு எங்களது இறுதிச்சடங்கை செய்யவும் என்று எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீசார் கூறும் போது வயதான இருவரும் நோயால் பாதிப்படைந்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் அளவுக்கு அதிகமாக மாத்திரையோ அல்லது விஷமோ குடித்து தற்கொலை செய்து இருக்கலாம். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர்கள் எப்படி? தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரிய வரும் என்று கூறினர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்