வாழப்பாடி அருகே பரிதாபம்: திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
வாழப்பாடி அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.;
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.
புதுப்பெண்
சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், சுஜிதா (வயது28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது செல்வகுமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு செல்வகுமார் சென்னை சென்றார். அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வகுமாருக்கு சரிவர வேலை இல்லை. திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்த நிலையில் சுஜிதாவை அழைத்துக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார் செல்வகுமார்.
செல்போனில் மட்டும் பேச்சு
பின்னர் வாழப்பாடி புதுப்பாளையத்தில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டில் சுஜிதாவை விட்டுவிட்டு செல்வகுமார் மீண்டும் சென்னை சென்றுள்ளார். அதன்பிறகு செல்போனில் மட்டும் மனைவியுடன் செல்வகுமார் பேசி வந்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக அவர் மனைவியை பார்க்க வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சுஜிதா மனம் உடைந்தார். மேலும் கடந்த 7 மாதங்களாக கணவர் தன்னை பார்க்க வரவில்லையே என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே வீட்டில் தனியாக இருந்த சுஜிதா, தன்னுடைய அறையில் நேற்று காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஜிதாவின் தாய் விஜயபானு வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிதா தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. திருமணமான 8 மாதத்தில் சுஜிதா இறந்து போனதால் சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி விசாரணை நடத்தி வருகிறார்.