28 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) 28 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) 28 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் விடுபட்ட முட்டம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், மகாராஜபுரம் ஊராட்சி 2-வது வார்டு, லீபுரம் ஊராட்சி 4-வது வார்டு, பறக்கை ஊராட்சி 8-வது வார்டு, வெள்ளிச்சந்தை ஊராட்சி 3-வது வார்டு, ஆத்திவிளை ஊராட்சி 3-வது வார்டு, திக்கணங்கோடு ஊராட்சி 6-வது வார்டு, குமரங்குடி ஊராட்சி 1-வது வார்டு, சூழால் ஊராட்சி 1-வது வார்டு, வெள்ளாங்கோடு ஊராட்சி 5-வது வார்டு ஆகிய 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் 2-வது கட்டமாக இன்று (சனிக்கிழமை) தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வெள்ளிச்சந்தை ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதைத் தொடா்ந்து மீதமுள்ள 8 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 30 பேர் போட்டியிடுகிறார்கள். முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் மொத்தம் 17 ஆயிரத்து 231 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20 வாக்குச்சாவடிகள் முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவி தேர்தலுக்கும், 8 வாக்குச்சாவடிகள் 8 பஞ்சாயத்து உறுப்பினர் பதவி தேர்தலுக்கும் அமைக்கப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு
நேற்று மதியத்துக்கு பிறகு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுச் சீட்டுகள், வாக்குப் பதிவு செய்யும் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் வாகனங்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு அதிகாரிகள் நேற்று இரவுக்குள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு முட்டம் பகுதியில் உள்ள 4 பள்ளிகளில் தலா 5 வாக்குச்சாவடிகள் வீதம் 20 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டடுள்ளன. எனவே முட்டம் பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக கருதப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முட்டத்தில் 2 வாக்குச்சாவடி மையங்களுக்கு அதாவது 2 பள்ளிகளுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் அந்தந்த சப்-டிவிஷன் துணை சூப்பிரண்டுகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர், என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.