சொகுசுகாரில் ரூ.5 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்
நாகர்கோவில் அருகே சொகுசு காரில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திங்கள்சந்தை,
நாகர்கோவில் அருகே சொகுசு காரில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-
அதிரடி சோதனை
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் தடை செய்யப்பட்ட விலை மதிப்பில்லாத பொருட்கள் கடத்தப்படுவதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்மூர்த்தி, சரவணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுங்கான்கடை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திரா காலனி பகுதியில் உள்ள செல்லையா மகன் தனபாலன் என்பவருடைய வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவருடைய வீட்டருகே நின்ற சொகுசு காரிலும் சோதனை நடத்தப்பட்டது.
திமிங்கல உமிழ்நீர் கட்டி
இந்த காரில் இருந்த ஒரு பையில் சுமார் 5 கிலோ எடை உள்ள ஆம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காரில் இருந்த தென்காசி மாவட்டம் பண்பொழி சிவராம்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
5 பேர் கைது
மேலும் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் பேரில் திமிங்கல உமிழ்நீர் கட்டியை விற்க வந்ததாக அந்த பகுதியில் பதுங்கியிருந்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோழிக்கோடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த வரதராஜன் (40), ராமநாதபுரம் பட்டினம் மரைக்காயர் தெருவை சேர்ந்த முகம்மது சுல்தான் (52), திருவட்டார் ஆதிகேசவன் தெருவை சேர்ந்த சில்வெஸ்டர் (47), புத்தன்கடையை சேர்ந்த வெர்ஜில் (43) ஆகியோரை மடக்கினர். மேலும் இந்த விவகாரத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், வேளிமலை சரக வனச்சரக அலுவலர் மணிமாறனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பிடிபட்ட 5 பேரும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடத்தல் கும்பல் அதிகரிப்பு
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வெளிநாட்டில் திமிங்கல உமிழ்நீர் கட்டிக்கு கடும் கிராக்கி என கூறப்படுகிறது. இதனை வாசனை திரவியத்துக்கு பயன்படுத்தலாம். இந்த கட்டியை திமிங்கல வாந்தி என்று அழைப்பார்கள். முதலில் உமிழ்நீராக இருப்பது, பிறகு கட்டியாக மாறுகிறது என்கிறார்கள்.
கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டப்படி திமிங்கல உமிழ்நீர் கட்டியை கடத்துவது குற்றமாகும். பொதுவாக வடமாநிலங்களில் தான் திமிங்கல உமிழ்நீர் கட்டியை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருந்தது. ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் கடத்தல் கும்பல் குமரி மாவட்டத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.