மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கொலையனூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் மதுப் பிரியர்கள் அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வரும் மதுப்பிரியர்கள் குடும்பத்தில் உள்ள மனைவியை அடித்து துன்புறுத்துவதோடு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் பாத்திரங்களை விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு அந்த ஊரில் உள்ள ஒரு சிலர் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதுதான் காரணம் என்றும், எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து மது விற்பனையை தடுத்திட வேண்டும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் ஏராளமானவர்கள் நேற்று காலை கொலையனூர்- உல்லியக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.