வீட்டின் பின்பக்க கதவை அறுத்து பணம்-வெள்ளிப்பொருட்கள் திருட்டு
வீட்டின் பின்பக்க கதவை அறுத்து பணம்-வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பணம்- வெள்ளிப்பொருட்கள் திருட்டு
பெரம்பலூர் 9-வது வார்டுக்கு உட்பட்ட நான்கு ரோடு துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் மகபூர் அலி (வயது 37). இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த மகபூர் அலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து நூர்ஜகான் தனது கணவர், குழந்தைகளுடன் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நடேசன் 2-வது தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் வசித்து வருகிறார். இதனால் மகபூர் அலியின் சொந்த வீடு பூட்டியே கிடந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் மகபூர் அலியின் சொந்த வீட்டின் பின்பக்க வாசலில் உள்ள மரக்கதவின் ஒரு புறம் ஆக்சா பிளேடு மூலம் அறுக்கப்பட்டிருப்பதாக அக்கம், பக்கத்தினர் நூர்ஜகானுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நூர்ஜகான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு, கை சங்கிலி உள்ளிட்ட கால் கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசாா் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க வாசலின் கதவை அறுத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.