பக்தர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் விண்ணளந்த பெரிய பெருமாள்
பக்தர்கள் கேட்கும் முன்பே அள்ளிக்கொடுக்கும் விண்ணளந்த பெரிய பெருமாள்
பொங்கலூர்
அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு கொங்குநாடு. இந்த திருநாட்டில் சைவமும், வைணவமும் தழைத்தோங்கியது. அதனால்தான் பார்போற்றும் சிவத்தலங்களும், வைணவ தலங்களும் கற்றளிகளாக காட்சி தருகிறது. திருப்பூரை அடுத்த கொடுவாய் என்றும் ஊரில் அலர்மேல் மங்கை நாச்சியார் சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாளும், நாச்சியாரும் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கி.பி. 10-ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழ மன்னர்கள் பல்வேறு கோவில்களை புனரமைத்தனர். அவற்றில் ஒன்று விண்ணளந்த பெருமாள் கோவிலாகும். கோவிலின் உள் பகுதியில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசோழன் கலிமூர்க்கன் என்ற அரசன் கிணறு ஒன்றை வெட்டி கொடுத்துள்ளான். கி.பி 1212-ம் ஆண்டில் வீரராஜேந்திரன் என்ற மன்னன் கோவிலில் அர்த்த மண்டபத்தை வேலைப்பாடுகள் கூடிய கதவு நிலை கால் ஆகியவை அமைத்துள்ளான். கோவிலில் பிரம்மோற்சவம் உள்பட அனைத்து விழாக்களும் நடைபெற்றதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
பிற மன்னர்களின் படையெடுப்புகளால் கோவில் சிதிலமடைந்தது. அதை தொடர்ந்து இந் கோவிலை கி.பி. 1489-ல் வீரநஞ்சராய உடையார் என்ற அரசன் கோவிலை நிர்மாணித்து கும்பாபிஷேகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு கொடுவாய் கிராமத்தில் இருந்த நிலங்கள் மூலமாக வருமானம், காணிக்கை ஆகியவற்றை கொண்டு பூஜைகள் நடைபெற ஏதுவாக கல்வெட்டில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
கோவில் விமானத்தில் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை சித்தரிக்கும் சுதை சிற்பங்கள் அழகுற காணப்படுகிறது. விண்ணளந்த பெரிய பெருமாள் 4 கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்பில் இயற்கையாக அமைந்துள்ள ஆபரணங்கள், பூணூல் ஆகியவை சிரசிலிருந்து முதுகுவரை காணப்படுகிறது. அலமேலுமங்கை தாயார் தாமரை மலரை ஏந்திய கைகளுடன் புன்சிரிப்புடன் காட்சியக்கிறார்.
பெருமாளின் 2 திருவடிகளும் பூமியை பார்த்தவாறு வாமன ரூபத்தில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் தனி சன்னதியில் 4 கரங்களுடன் சங்கு சக்கரம் வரத அபய ஹஸ்தங்கள் உடன் சாந்த சொரூபியாகவும், தாயார் தனது வலது கரத்தினால் பெருமாளை ஆலிங்கனம் செய்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கொடு எனக்கேட்பதற்கு முன்னரே அள்ளிக்கொடுத்தருளும் கேசவப்பெருமாள் இவர். இவரை வழிபட்டால் தொழில், கல்வி மேம்பாடு அடைவதுடன் பில்லி, சூனிய தோஷங்கள் நீங்குவதுடன், கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படுவதாக நம்பப்படுகிறது. வெளியே இரட்டை அரச மரங்களின் நடுவில் 4 திருக்கரங்களுடன் கை கொடுக்கும் பிள்ளையார் என்ற பெயரில் தும்பிக்கை ஆழ்வார் அருள்புரிகிறார். கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, ஏகாதசி திருமஞ்சனம், பவுர்ணமி, சத்ய நாராயண பூஜை, மகாலட்சுமி தாயார் திருமஞ்சனம், சுவாதி லட்சுமி நரசிம்மர் அபிஷேகம் மூலம் ஆஞ்சநேயர் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ராமானுஜர் ஜெயந்தி, லட்சார்ச்சனை, வைகுண்ட ஏகாதசி, துவாதசி பாரனை போன்ற விசேஷங்களும், தீபாவளி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை, ஆடி 18 பெருக்கு, பொங்கல், மகா சங்கராந்தி, பங்குனிஉத்திரம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற தினங்களிலும், சத்ய நாராயண வழிபாடு மன்றம் மற்றும் ஆவுடைநாயகி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. 1872-ம் ஆண்டு கோவிலின் அர்த்த மண்டபம் நன்கொடையாளரால் முதலியாரின் மகன் வீரபத்திர முதலியாரால் புனரமைத்து தரப்பட்டது. இந்த கோவிலில் 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த தகவலை கொடுவாய், விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டு மன்ற பட்டாச்சாரியார் கே.வி.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.