கரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை
கரூர் மாவட்டத்தில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்
பலத்த மழை
கரூரில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இந்த மழையானது இடியுடன் கூடிய பலத்த மழையாக மாறியது. இதனால் கரூர், பசுபதிபாளையம், சுங்ககேட், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக பலத்த மழை நீடித்தது.
இந்த பலத்த மழையால் கரூர் ஜவகர்பஜார், பழைய பை-பாஸ் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, தலைமை தபால் நிலையம், ஆசாத் ரோடு, பழைய திண்டுக்கல் ரோடு, சுங்ககேட் பஸ்நிறுத்தம் உள்ளிட்ட கரூரின் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. மேலும் பலத்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
தேங்கிய மழைநீர்
குறிப்பாக பழைய பை-பாஸ் சாலையில் குளம்போல தேங்கிய மழைநீரில் சென்ற பஸ்சில் மழைநீர் ஏரியதன் காரணமாக கோளாறு ஏற்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து பழைய பை-பாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குறுக்கு சாலைகள் வழியாக வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். இந்த நிலையில் கரூர் சின்னாண்டாங்கோவில் சந்திப்பில் காவல்துறையினர் ஜீப் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஜீப் வாகனத்தின் மீது மோதி இழுத்து சென்று சாலை நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் படுகாயம் அடைந்தார். இதனால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால், கரூர்-கோவை சாலை, ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தோகைமலை
தோகைமலை, குளித்தலை, நொய்யல், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.