நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை கோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2021-10-08 18:53 GMT
மும்பை, 

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஆர்யன்கான் கைது
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருளுடன் இருந்ததாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 23) உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீன் மனு
இந்தநிலையில் சிறையில் உள்ள ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் ஜாமீன் கேட்டு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ஆர்.எம்.நெர்லிகர் முன் நடந்தது. 

அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் அட்வகேட் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
“புட்பால்” 
இந்த வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. சிறப்பு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும்.  குற்றவாளிகள் பலர் குழுமி இருந்து போதை விருந்து நடத்தியதை தற்செயல் நிகழ்வு அல்ல. இது திட்டமிடப்பட்ட  சம்பவமாகும். ஆர்யன் கான் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஆர்யன் கான் மற்றும் இணை குற்றவாளி அஞ்சித் குமார் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடலில் குறிப்பிடப்பட்ட “புட்பால்” என்பது “அதிகளவு போதைப்பொருள்” என்பதை குறிக்கிறது. 
இவ்வாறு அவர் வாதிட்டார்.

ஆர்யன் கான் தரப்பு வக்கீல் கூறுகையில், “குற்ற சதியை நிரூபிக்கும் வகையில் போதைப்பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சமூக அந்தஸ்துள்ளவரை சிறையில் அடைத்து வைத்து இருப்பது அவமானத்துக்கு உள்ளாக்கும். ஆர்யன் கான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், சாட்சிகளை கலைப்பார் என்று கூறி விட முடியாது. மேலும் இந்த கோர்ட்டுக்கு ஜாமீன் வழங்க அதிகாரம் உள்ளது. எனவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்றார். 
தள்ளுபடி 
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினார். 

இதையடுத்து ஆர்யன் கான் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
-----------------

மேலும் செய்திகள்