4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-10-08 18:52 GMT
திருப்பூர்
திருப்பூரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
ப.சிதம்பரத்தின் உறவினர்
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமியின் மகன் சிவமூர்த்தி (வயது 47). அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மனைவியின் தங்கையான பத்மினியின் மருமகன் ஆவார்.
கடந்த 25-6-2018 அன்று காலை 11 மணி அளவில் சிவமூர்த்தி கோவை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன்கள் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சின்னசாமி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
காரில் கடத்தல்
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து 27-ந்தேதி அதிகாலை சிவமூர்த்தியின் காருடன் 3 பேரை ஆம்பூர் அருகே மின்னூரில் போலீசார் பிடித்தனர். தகவல் தெரிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு சென்று அவர்கள் 3 பேரிடமும் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் கணபதிமாநகரை சேர்ந்த விமல் (39), அவரது நண்பரான காரமடை தேக்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25), கவுதம் (25) என்பது தெரிய வந்தது. மணிகண்டன், கவுதம் ஆகியோர் நாய் வளர்ப்பு பண்ணை நடத்தி வந்தனர்.
விமல் திருப்பூரில் ஏற்கனவே பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் சிவமூர்த்தியின் நண்பர் ஆவார். தொழில் நடத்துவதற்கு விமலுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. சிவமூர்த்தியிடம் பணம் இருப்பதை அறிந்து அவரை கடத்தி பணம் பறிக்க விமல் திட்டமிட்டார். இதற்காக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இடம் விற்பனைக்கு உள்ளது. நேரில் சென்று விலைபேசி முடிக்கலாம் என்று கூறி சிவமூர்த்தியை விமல் அழைத்தார். இதை நம்பி சிவமூர்த்தி தனது காரில் புறப்பட்டார். அன்னூர் சென்றதும் விமல் ஏறிக்கொள்ள பின்னர் காரமடை குறுந்தமலை அடிவாரத்துக்கு சென்றதும் அங்கு தயாராக இருந்த மணிகண்டன், கவுதம் மற்றும் மணிகண்டனின் உறவினரான மூர்த்தி (40) ஆகியோர் காரில் ஏறியுள்ளனர்.
அணையில் பிணம் வீச்சு
சிறிது தூரம் சென்றதும் ரூ.50 லட்சம் கேட்டு சிவமூர்த்தியை மிரட்டினார்கள். அவர் மறுக்கவே கம்பளி போர்வையால் மூடி, அட்டை பெட்டியை ஒட்டும் டேப்பை வாயில் சுற்றி அவரை தாக்கியுள்ளனர். இதில் சிவமூர்த்தி இறந்தார். உடனே மூர்த்தியை அங்கேயே இறக்கி விட்டு, சிவமூர்த்தியின் உடலை மறைவான இடத்தில் வீசுவதற்காக விமல், மணிகண்டன், கவுதம் ஆகியோர் காரில் தாம்பரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்று விட்டு 26-ந்தேதி மாலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு சென்றனர். அங்கு மைல்கல்லை சிவமூர்த்தியின் உடலில் கட்டி அணைக்குள் வீசிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு 3 பேரும் கோவை வந்து கொண்டிருந்தனர்.
ஆம்பூரை அடுத்த மின்னூருக்கு 27-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அவர்கள் காரில் வந்தபோது போலீஸ் வாகன சோதனையில் 3 பேரும் சிக்கினர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்கள் கொடுத்த தகவலின்படி மூர்த்தியையும் கைது செய்தனர். பணத்துக்காக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் 40 சாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், சிவமூர்த்தியை கொலை செய்த குற்றத்துக்கு விமல், மூர்த்தி, மணிகண்டன், கவுதம் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், ஆள்கடத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கொள்ளையடித்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், தடயத்தை அழிக்க முயன்ற குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் 4 பேரும் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார். 
இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்