திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்கள்
ஆயுதபூஜையையொட்டி திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்கள் பனியன் தொழிலாளர்களின் வசதிக்காக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்
ஆயுதபூஜையையொட்டி திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்கள் பனியன் தொழிலாளர்களின் வசதிக்காக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
ஆயுதபூஜை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் விஜயதசமி வருகிறது. அதன்பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ளது.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக வருகிற 13-ந் தேதி இரவு முதல் திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திருப்பூர் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, தேனி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில், சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளனர்.
13-ந் தேதி இரவு முதல்...
திருப்பூர் புதிய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம், யுனிவர்செல் தியேட்டர் முன்பு ஆகிய பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஒரே இடத்தில் பயணிகள் கூட்டம் சேராதவகையில் தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக கோவில்வழியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் தொழிலாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 13-ந் தேதி இரவு முதல் 18-ந் தேதி இரவு வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகையை பார்த்து கூடுதல் பஸ்கள் இயக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.