உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடக்கலாம்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடக்கலாம், என கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடக்கலாம், என கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி முகாம்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் 2-வது டோஸ் போட்டுள்ளனர்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 1,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் பாதிப்பு எதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிகளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதில்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் அதிக பாதிப்பு ஏற்படும்.
விடிய விடிய...
நாளை (இன்று) 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் 95 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் நுண் பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர். வாக்குப்பதிவு கேமரா மூலம் நேரடியாக பதிவு செய்யப்படும்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஊதியம் வழங்கப்படும். 12-ந்தேதி வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2,500 பேர் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் வாக்குகள் வார்டு வாரியாக பிரித்து எடுக்கப்படும்.
மின்னணு வாக்கு எந்திரம் போல வேகமாக வாக்குகளை எண்ண முடியாது. எனவே இரவு 12 மணி வரையிலும் அல்லது 13-ந் தேதி அதிகாலை வரையிலும் கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.