திருப்பத்தூரில் காதல் மனைவியை எரித்துக்கொன்ற வாலிபர் தஞ்சாவூரில் சிக்கினார்
திருப்பத்தூரில் காதல் மனைவியை எரித்துக்கொன்ற வாலிபரை தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் கைது செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் காதல் மனைவியை எரித்துக்கொன்ற வாலிபரை தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் கைது செய்தனர்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 30). திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (24). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ (3) என்கிற மகள் உள்ளார்.
திவ்யா திருப்பத்தூர் குனிச்சி பகுதியில் உள்ள கல்லூரியில் கடந்த வருடம் பி.எட்., முடித்துள்ளார். அப்போது கல்லூரிக்கு செல்வதற்காக கந்திலியை அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார். பின்னர் கணவர் வீட்டுக்கு வரவில்லை.
எரித்துக்கொலை
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி சத்தியமூர்த்தி, திவ்யா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்தார். 25-ந் தேதி அதிகாலை கோவிலுக்கு செல்வதாக கூறி திவ்யா மற்றும் குழந்தையை அழைத்து சென்று திவ்யாவுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா மயங்கினார்.
உடனே திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி கிராமத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் திவ்யா மீது சத்தியமூர்த்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.
தஞ்சாவூரில் சிக்கினார்
சத்தியமூர்த்தி சென்னை போரூர் அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவியை அழைத்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடி வந்த தனிப்படையினருக்கு சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து தனிப்படையினர் தஞ்சாவூருக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை கைது செய்தனர். அவரை கந்திலிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணைக்கு பிறகே எதற்காக மனைவியை எரித்துகொலை செய்தார், நர்சிங் மாணவியை எதற்காக அழைத்துச் சென்றார் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.