8 மணி நேரம் பாட்டு பாடிய நாட்டுப்புற கலைஞர்கள்
8 மணி நேரம் பாட்டு பாடிய நாட்டுப்புற கலைஞர்கள்
பொள்ளாச்சி
உலக சாதனைக்காக நாட்டுப்புற கலைஞர்கள் 8 மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து பாட்டு பாடினர்.
நாட்டுப்புற கலைஞர்கள்
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரில் நாட்டுப்புற கலைஞர்கள் உலக சாதனைக்காக பம்பை, உடுக்கை அடித்து பாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 26 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு சிவன், கருப்புசாமி, பார்வதி ஆகிய தெய்வங்களின் வேடமிட்டு வந்தனர்.
பின்னர் பம்பை, உடுக்கை அடித்து தொடர்ந்து இடைவிடாது 8 மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்களை பாடி உலக சாதனையில் ஈடுபட்டனர். இதில் உலக சாதனை புத்தக பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்காணித்தார்.
8 மணி நேரம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 8 மணி நேரம் பாடல்களை பாடி உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம் பெற்றனர். அதை தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டது.
இதுகுறித்து நாட்டுப்புற கலைஞர்கள் கூறும்போது, கொரோனா காரணமாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றனர்.