நாயக்கனேரி ஊராட்சியில் 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 100 போலீசார் பாதுகாப்பு
நாயக்கனேரி ஊராட்சியில் தேர்தலையொட்டி 6 சோதனை சாவடி அமைத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், ஓட்டுப்போட வருபவர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
நாயக்கனேரி ஊராட்சியில் தேர்தலையொட்டி 6 சோதனை சாவடி அமைத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், ஓட்டுப்போட வருபவர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுமூகமாக நடந்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 98.5 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையில் பணியாற்றுகிற அனைவரின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் கந்திலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் 2-ம் கட்ட தேர்தலும் சுமுகமாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
6 சோதனை சாவடிகள்
ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றியங்களில் 179 இடங்களில் 385 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 46 இடங்களில் அமைந்துள்ள 106 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 1,217 பேர் பணிபுரிகின்றனர்.
மாதனூர் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் மட்டும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்னர். மேலும் அங்கு 6 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வாக்களிக்க வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் எந்தவொரு பயமும் இன்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.