கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றம் கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோரம் மற்றும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோரம் மற்றும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
தொடர் மழை
தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 760 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 820 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை வந்தடைந்தது. இதனால் நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 1,712 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,902 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கலெக்டர் நேரில் ஆய்வு
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,612 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,764 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஊத்தங்கரை வரை தென்பெண்ணையாற்றின் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
தென்பெண்ணை ஆற்றின் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வட்ட அளவில் நீச்சல் பயிற்சி பெற்றவர்களும், மீட்பு குழுக்களும், 3,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதே போல 5 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், குழந்தைகள் தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ கூடாது. கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் முற்றிலும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, கிருஷ்ணகிரி அணையில் தயார் நிலையில் வைத்துள்ள மணல் மூட்டைகள், பரிசல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்) காளிபிரியன், வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, கிராம நிர்வாக அலுவலர் பாஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.