டிப்பர் லாரியை திருடிச்சென்ற 2 பேர் கைது
புதுச்சேரியில் டிப்பர் லாரியை திருடிச்சென்ற 2 பேரை அரியலூரியில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, அக்.
புதுச்சேரியில் டிப்பர் லாரியை திருடிச்சென்ற 2 பேரை அரியலூரியில் போலீசார் கைது செய்தனர்.
லாரி திருட்டு
புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு மகாத்மா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக டிப்பர் லாரியை கடந்த 6-ந் தேதி இரவு கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்த போது அந்த லாரியை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
லாரி திருட்டு போனதால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அப்போது விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் லாரியை தேடிச்சென்றனர். அரியலூர் அருகே சென்றுகொண்டு இருந்த லாரியை போலீசார் மடக்கி, அதில் இருந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை புதுச்சேரி கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகரை சேர்ந்த கண்ணாடி வேலு என்கிற சிங்கார வடிவேலு (47), திருவனந்தபுரத்தை சேர்ந்த மன்மோகன் (36) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் புதுச்சேரியில் இருந்து லாரியை திருடிச்சென்று தமிழகத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.