கொரோனாவால் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம்

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-08 17:09 GMT
புதுச்சேரி, அக்.9-
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா நிவாரணம்
கொரோனாவினால்   உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்  என்று சுப்ரீம்     கோர்ட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தர விட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இந்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்தும் தனியாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் மூலம் புதுச்சேரியில் 1,445, காரைக்கால் 248, மாகி 45, ஏனாம் 107 என மொத்தம் 1,845 குடும்பத்தினர் பயனடைகின்றனர்.
காத்திருந்தார்
நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தொடங்க இருந்த காலை 10 மணிக்கு முன்பாகவே வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிதியுதவி வழங்கினார். ஆனால் இதில் பங்கேற்க இருந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் வர தாமதமானது. இதற்காக அங்கு வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன்  ரங்கசாமியிடம் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்