தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-08 16:58 GMT

பஸ்கள் செல்வது இல்லை

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்கு செல்வது இல்லை. மாறகாக வெளியே ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், கிணத்துக்கடவு. 

கழிவுநீர் குழாயில் உடைப்பு 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிணவறை செல்லும் வழியில் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீருடன் சேர்ந்து ரத்தமும் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், கோவை. 

தடுப்பணை தூர்வாரப்படுமா?

கோவை அருகே உள்ள சோமையனூர்-பாப்பநாயக்கன் பாளையம் இணைப்புசாலையில் சங்கனூர் பள்ளம் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை போதிய பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி கிடக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை தூர்வார வேண்டும். 
நடராஜன், நஞ்சுண்டாபுரம். 

தெருநாய்கள் தொல்லை

கோவை வேடப்பட்டி ராஜன் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக சுற்றித்திரியும் அவை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. அத்துடன் நடந்து செல்பவர்களையும் விட்டுவைப்பது இல்லை. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரான்சிஸ், வேடப்பட்டி. 

புகை மண்டலத்தால் அவதி 

கோவை மாநகராட்சி 66-வது வார்டு கண்ணபிரான் மில் ரோட்டில் பி.ஆர்.நகர் பகுதியில் மரங்களை வெட்டி அதன் கிளைகளை அங்கு குவித்து வைத்து உள்ளனர். அத்துடன் அங்கு குப்பைகளும் அதிகமாக கிடக்கிறது. அதில் சிலர் தீ வைப்பதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், கோவை. 

நடைபாதை ஆக்கிரமிப்பு 

கோவை குனியமுத்தூர் பிரிவில் தெற்கு மண்டல அலுவலகம் உள்ளது. இதன் எதிரே உள்ள குமரன் கார்டன் முன்பு சாக்கடை கால்வாயின் மீது பொருட்களை குவித்து வைத்து உள்ளனர். இதனால் அந்த நடைபாதை வழியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரமணியன், கோவை. 

ஆபத்தான மின்கம்பம் 

கோவை கணபதி சின்னசாமி நகரில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. அதில் உள்ள காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருகிறது. எனவே அதை உடனடியாக மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், கணபதி. 

மூடாத ஆழ்துளை கிணறு

கோவை மாநகராட்சி 4-வது வார்டில் திருப்பதி நகர் 4-வது வீதியில் ஆழ்துளை கிணறு உள்ளது. இது சரிவர மூடப்படாமல் இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் அபாயம் ஏற்பட வாய்ப்பு நிலவி வருகிறது. எனவே அதை உடனடியாக சரியாக மூட வழிவகை செய்ய ணவண்டும்.
பார்த்தசாரதி, கோவை. 

அடிக்கடி ஏற்படும் மின்தடை 

கோவையை அடுத்த கோவைப்புதூர் அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் பலமுறை மின்தடை ஏற்படுகிறது. காலை முதல் இரவு வரை பல்வேறு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். மின் தடை ஏற்படுவதை சீரமைத்து சீரான மின் வினியோகத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனீஸ்வரன், கோவைப்புதூர்.

டெங்கு தடுப்பு பணி

கோவையின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலை தடுக்க மருந்து தெளிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
சுசிலா, பெரியநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்