‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
மானூர் தாலுகா நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரா. இவர், நெல்லை திருத்து தெற்கு தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், எனவே கழிவுநீரை அகற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரி ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அங்கு கழிவுநீரை அகற்றி சுத்தப்படுத்தி உள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
சாலை வசதி வேண்டும்
நாங்குநேரி தாலுகா பாப்பாங்குளம் கிராமம் மாங்குளத்தில் உள்ள தெரு குண்டும், குழியுமாக மோசமாக காணப்படுகிறது. மேலும் அங்கு வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீரும் தெருவில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், மழை காலத்தில் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே, அங்கு சாைல மற்றும் வாறுகால் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முத்து, மாங்குளம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
நெல்லை மாநகராட்சி குலவணிகர்புரம்-குறிச்சி சாலையில் காந்திபுரம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. அந்த குப்பைகள் அருகில் உள்ள வாறுகாலில் விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் மழைக்காலத்தில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே, அந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- பி.ஆர்.சுப்பிரமணியன், பத்தமடை.
ஆபத்தான நடைபாதை
நெல்லை டவுன் நயினார்குளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக படகு குழாம் அமைப்பதற்காக, குளத்தின் கரையில் இருந்து குளத்துக்குள் சிறிது தூரம் சென்றுவர நடைபாதையும், அதன் முடிவில் காட்சி கோபுரம் போன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நடைபாதை ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. நெல்லைக்கு வரும் சுற்றுலா பயணிகள், குளத்துக்குள் காட்சி கோபுரம் போன்று இருப்பதை பார்த்ததும் ஆர்வத்துடன் உள்ளே செல்கின்றனர். அப்போது சிறு குழந்தைகள் குளத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் அங்கு நுழைவுவாயில் பகுதியை அடைக்க வேண்டும் அல்லது தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- பாலகிருஷ்ணன், டவுன்.
தெருநாய்கள் தொல்லை
தென்காசி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே, தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- அருணாசலம், தென்காசி.
சாலை பணி விரைவு பெறுமா?
தென்காசி-செங்கோட்டை சாலையில் தினமும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் தென்காசியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், இன்னும் பணி நிறைவடையவில்லை. இதனால் செங்கோட்டையில் இருந்து இலஞ்சி வழியாக தென்காசிக்கு 8 கிலோமீட்டர் தூரத்தில் செல்ல வேண்டியதை, குற்றாலம் வழியாகவோ அல்லது இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாகவோ கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
சாய்ந்து நிற்கும் மின்கம்பம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அதை ஒரு கம்பை கொண்டு முட்டுக்கொடுத்து உள்ளனர். இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- அருள், காமநாயக்கன்பட்டி.
அரசு மருத்துவமனை தேவை
நாசரேத் பகுதியில் முன்பு அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது. இதனால் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, நாசரேத்தில் அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவசண்முகம், நாசரேத்.