பொள்ளாச்சி பழனி இடையே மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி-பழனி இடையே மின்சார ரெயில் பாதைக்காக மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-08 16:31 GMT
பழனி: 

ரெயில் மின்பாதை
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், ரெயில் மூலம் வருகின்றனர். இதில் கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் பழனி வர ரெயில்சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பழனி வழியாக பாலக்காடு, மதுரை, சென்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனிஉத்திரம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பாலக்காடு-சென்னை, மதுரை-திருவனந்தபுரம் ஆகிய ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல்-பொள்ளாச்சி ரெயில் பாதையை மின்மயமாக்கி, கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின்மயமாக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே தண்டவாளத்தின் அருகில் மின்கம்பங்கள் நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

75 சதவீதம் நிறைவு
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின்மயம் ஆக்குவதற்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன் பொருத்தப்பட்ட ரெயில் உதவியுடன் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பொள்ளாச்சி-பழனி இடையே மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்தது.  

விரைவில் மின்கம்பங்களில் மின்கம்பி பொருத்தப்பட உள்ளது. அதேபோல் பழனி-திண்டுக்கல் இடையே குழி தோண்டப்பட்டு கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மின்சார ரெயில் இயக்குவதற்காக கோமங்கலம், பழனி, ஒட்டன்சத்திரத்தில் துணை மின்நிலையம் (பவர்ஹவுஸ்) அமைக்கப்பட உள்ளது. மின்பாதை அமைக்கும் பணி நிறைவு அடைந்தவுடன் சோதனை ரெயில் ஓட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் செய்திகள்