என்ஜினீயர் வீட்டில் 63 பவுன் நகை கொள்ளை
என்ஜினீயர் வீட்டில் 63 பவுன் நகை கொள்ளை;
கோவை
கோவிலுக்கு சென்றிருந்த என்ஜினீயர் வீட்டில் 63 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது
என்ஜினீயர்
கோவை பீளமேடு சிவராம்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). என்ஜினீயர். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த அவர் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கோவை திரும்பினார்.
பின்னர் அவர், தனது குடும்பத்தினருடன் சிவராம் நகரில் வசித்து வந்தார். இவர், கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அவர் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், வளையல்கள் உள்பட 63 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பியது தெரியவந்தது.
மேலும் ரூ.90 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு கேமரா
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.