கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

கோட்டக்குப்பம் அருகே கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-08 16:27 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த பிள்ளைச்சாவடி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. மீன்பிடி தொழிலையே நம்பி இந்த கிராம மக்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு, சமீபத்தில் ஆரோவில் கடற்கரை, பொம்மையார்பாளையம் வரை உள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுத்தது.
ஆனால் பக்கத்து கிராமமான பிள்ளைச்சாவடி கடற்கரையில் கற்களை கொட்டவில்லை. இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 75 மீட்டர் இருந்த மணல் பரப்பு தற்போது 10 மீட்டர் குறைந்துள்ளது. மேலும் அவர்கள் படகு நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாமல் பக்கத்து மீனவ கிராமத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் படகுகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது.

மீனவர்கள் சாலை மறியல்

கோட்டக்குப்பத்தில் இருந்து பொம்மையார்பாளையம் வரையில் கற்களை கொட்டிய அரசு புதுச்சேரி எல்லையோரம் உள்ள பிள்ளைச்சாவடி கடல் பகுதியிலும் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பிள்ளைச்சாவடி மீனவ குடியிருப்புக்குள் கடல்நீர் புகுந்ததால் 2 விசைப்படகு மற்றும் 4 வீடுகள் சேதமடைந்தன. இதனால் அச்சமடைந்த மீனவ மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.15 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடல் அரிப்பை தடுக்க உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் காலை 10.30 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்