தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
வேடசந்தூரில் சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
வேடசந்தூர்:
பாலியல் தொல்லை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 3 தலைமை ஆசிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தனது செல்போனில் இருந்து வாட்ஸ்-அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் தகவல் அனுப்பி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
பணியிடை நீக்கம்
இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை நேரில் அழைத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அவர் சமர்ப்பித்தார்.
அதன்பேரில் அவர் இருதரப்பினரிடமும் மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.