நாட்டுப்புற பாடல்களை பாடி நெல் நடவு செய்யும் பெண்கள்
கீழ்பவானி பாசன பகுதிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி பெண்கள் நெல் நடவு செய்தனர்.
பவானிசாகர் அணை நீர் பாசனத்தின் மூலம் கீழ்பவானி பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கரும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 24 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போக சாகுபடிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடுக்காம்பாளையம், வேட்டைகாரன்கோவில், நாதிபாளையம், கங்கம்பாளையம், பெரியார்நகர், ஒத்தக்குதிரை, பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடிக்காக நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடுக்காம்பாளையம், ஆலங்காட்டுபுதூர் பகுதியில் பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க கிராமிய பாடல்கள் பாடி நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். பாடலுக்கு ஏற்ப ஒரு சிலர் குலவை சத்தம் எழுப்பியபடியும் நெல் நடவு செய்தனர்.
---