சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட பசு மாடுகளின் சாணம் ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட பசு மாடுகளின் சாணம் ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம் போனது.;

Update: 2021-10-08 15:12 GMT
சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் மூலம் காணிக்கையாக விடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படும் இந்த பசு மாடுகள் மூலம் சென்னிமலை மலை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு தினமும் காலையில் திருமஞ்சனம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இங்குள்ள மாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு குழியில் கொட்டப்பட்டு வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சேகரித்து வைக்கப்பட்டுள்ள சாண எரு நேற்று ஏலம் விடப்பட்டது.
இந்து சமய அறநிலைய துறையின் பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார், சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன், கண்காணிப்பாளர் லதா முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது. இதில் 4 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் பசுவபட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி பசு மாடுகளின் சாணத்தை ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

மேலும் செய்திகள்