முத்தாரம்மன் கோவில் தசரா விழா; பக்தர்கள் வெளி பிரகாரத்தில் நின்று சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

Update: 2021-10-08 12:24 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசரா திருவிழா கொடியேற்றம் அன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
இரண்டாம் திருவிழாவான நேற்றுமுன்தினம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வெளிப்பிரகாரத்தில் தரிசனம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளிப்பிரகாரத்தில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு காப்புக்கட்டி சென்றனர்.
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் ஊருக்கு வெளியே புறவழிச் சாலை அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர்வாசிகளுக்கு பிரச்சினை

வெளியூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வரும் உள்ளூர் வாசிகள் அனைவரும் சுமார் 2 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் வரை நடந்து தான் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் குலசேகரன்பட்டினம் ஊர் நுழைவுவாயில் அனைத்து பகுதிகளும் பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் வெளியில் சென்று திரும்பும்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க உள்ளூர்வாசிகள் சிரமமின்றி வெளியூர் சென்று வருவதற்கு போலீசார் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்