54 ஊராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 54 ஊராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2021-10-08 06:37 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சி பகுதிகளில் நடந்த மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி வேன்களில் கொண்டு வரப்பட்டு வருகிற 12-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டது.

பின்னர் அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த அறையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜன்னல்கள் அனைத்தும் மரப்பலகை வைத்து முழுவதும் அடைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அறை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் அதிகாரி உள்ள இடத்திற்கு சென்று அவரிடம், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிக்கும் வகையில் அ.தி.மு.க. முகவர்களை அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை தங்கள் முகவர்கள் கண்காணிக்க எல்.இ.டி. திரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை இணையதளம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஓட்டு எண்ணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளதால் கல்லூரி முழுவதும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று வரும் முகவர்கள் வருவதற்காக சவுக்கு கம்புகளால் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஒரே வாக்கு பெட்டியில் முத்திரை குத்தி போடப்பட்ட 4 பதவிகளுக்கான வாக்கு சீட்டுகளை ரகம் பிரித்து வைப்பதற்காக 300 பெட்டிகள் 10 அறைகள் முழுவதும் வேட்பாளர்களின் முகவர்கள் அமரும் இடம் அருகில் வைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அத்துமீறி நுழையாதவாறு வெல்டு செய்யப்பட்ட இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பி வேலிகளின் வெளி பகுதியில் அமர்ந்துதான் அவர்கள் வாக்கு சீட்டு எண்ணிக்கையை பார்க்க முடியும். வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை அருகில் அவசர தேவைக்காக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்