தி.மு.க. வேட்பாளரை மிரட்டியதாக புகார்: முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளரை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தின்போது கடந்த 4-ந் தேதி பெரும்பாக்கம் எழில் நகரில் பிரசாரம் செய்த ஊராட்சி தி.மு.க. வேட்பாளர் ஆஷாவை, அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெரும்பாக்கம் போலீசில் ஆஷா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான பெரும்பாக்கம் ராஜசேகரை கைது செய்ய நேற்று அவரது வீட்டுக்கு சென்றார். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து ராஜசேகர் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் ராஜசேகரை கைது செய்ய போலீசார் வந்து உள்ள தகவல் அறிந்ததும் சென்னை புறநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜானகிராமன், குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரும்பாக்கம் ராஜசேகர் வீட்டு முன்பு குவிந்தனர். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் கவுன்சிலர் ராஜசேகரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து திடீரென பெரும்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன் தலைமையில் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் உதவி கமிஷனர் பிராங் டி ரூபனுடன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜசேகருக்கு முன் ஜாமீன் பெறப்பட்டு இருப்பதாகவும், அதன் நகலை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு உதவி கமிஷனர், அவர் முன் ஜாமீன் பெற்றிருந்தால் அதன் நகலை வழங்கிட வேண்டும் என்றார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.