சென்னை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-10-08 02:09 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் பழைய மடிக்கணினி ‘சார்ஜர்கள்’, 2 ஐபோன்கள் இருந்தன. மடிக்கணினி ‘சார்ஜர்களை’ பிரித்து பார்த்தபோது அதில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 295 கிராம் தங்கம் மற்றும் மடிக்கணினி ‘சார்ஜர்கள்’, ஐபோன்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த 21 வயது வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தன. மேலும் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.32 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 774 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 69 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 21 வயது வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்