முதல் கட்ட தேர்தல் 10 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைத்து சீல் வைப்பு

முதல் கட்ட தேர்தல் 10 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைத்து சீல் வைப்பு

Update: 2021-10-07 22:06 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் 10 வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து `சீல்' வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஓட்டுப்பெட்டிகள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக 10 ஒன்றியங்களில் நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனால் ஓட்டுப்பெட்டிகளை மூடி `சீல்' வைத்து அனுப்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மண்டல பகுதியில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் சேகரிக்கப்பட்டு விடிய, விடிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணி நேற்று காலை வரை நீடித்தது. அங்கு கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. நேற்று காலை அந்த அறையின் கதவு மூடப்பட்டு, அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் `சீல்' வைக்கப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் நுழைவு வாசல் பகுதியில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவில் பதிவாகும் காட்சியை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரையிலும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் பார்த்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாசல், அதன் சுற்றுப்பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
வாக்கு எண்ணும் மையங்கள்
பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மானூர் ஒன்றியத்துக்கு காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரி, சேரன்மாதேவி ஒன்றியத்துக்கு பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பை ஒன்றியத்துக்கு விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஒன்றியத்துக்கு நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கடையம் ஒன்றியத்துக்கு மேட்டூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு அத்தியூத்து சர்தார் ராஜா என்ஜினீயரிங் கல்லூரி, மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு வீரசிகாமணி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு சுப்பிரமணியபுரம் வியாசா பெண்கள் கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குகள் எண்ணும் பணி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.
.........

மேலும் செய்திகள்