100 நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
100 நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எசனையை சேர்ந்தவர் அசோகன். தற்போது இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர்- வடக்கு மாதவி ரோடு அருணாச்சல கவுண்டர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அசோகனின் மனைவி கலையரசி (வயது 41) நேற்று காலை 100 நாள் வேலைக்காக எசனைக்கு சென்றார். மாலையில் அவர் வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கோனேரிபாளையம்-காந்தி நகர் இடையே புறவழிச்சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் கலையரசியின் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்தார். உடனடியாக சுதாரித்த கலையரசி, தாலிச்சங்கிலியை கையில் பிடித்தார். ஆனால் சங்கிலி அறுந்ததில் 6 பவுன் சங்கிலியில், 5 பவுன் மர்மநபர் கையில் சிக்கியது. 1 பவுன் மட்டும் கலையரசின் கையில் கிடைத்தது. இதையடுத்து கலையரசி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார். இது தொடர்பாக கலையரசி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது பெண்ணிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் அரங்கேறியது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.