கோர்ட்டு பெண் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு
கோர்ட்டு பெண் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
நகை-பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா(வயது 47). இவர் அரியலூர் கோர்ட்டில் சிராசுதாரராக பணியாற்றி வருகிறார். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் நிர்மலா ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் முதல் கிராசில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். நிர்மலாவின் மகள் வெளியூரில் தங்கி கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.
நிர்மலா காற்றுக்காக மாடியில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு, கீழே உள்ள வீட்டு வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு நிர்மலா வீட்டை பூட்டிவிட்டு கீழே வந்து படுத்து தூங்கினார். இந்நிலையில் நள்ளிரவில் மாடியில் உள்ள அவரது வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் சங்கிலி, 1 பவுன் கை சங்கிலி, அரை பவுன் தோடு, மோதிரங்கள், டாலர் மற்றும் பாத்திரங்களில் மூடி வைத்திருந்த நகைகள் உள்ளிட்ட 15 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசுகள் மற்றும் ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுடன் உள்ள பை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று அதிகாலை எழுந்த நிர்மலா வீட்டிற்கு சென்றபோது கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் கலைக்கப்பட்டு கிடந்தது. மேலும் சமையல் அறைக்குள் இருந்த பாத்திரங்கள் கலைக்கப்பட்டு கீழே கிடந்தன. மேலும் பீரோ மற்றும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நிர்மலா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து மோப்ப நாய் டிக்சி, மோப்ப நாய் குழு போலீசார் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் டிக்ஸி வீடு, தெரு ரோடு மற்றும் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஓடி, மீண்டும் வீட்டிற்கு அருகில் வந்து படுத்துக் கொண்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கைரேகை நிபுணர் துர்க்காதேவி மற்றும் குழுவினர் திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.