ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரம்
ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பஸ் நிலையம்
ஈரோடு பஸ் நிலையத்தை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.45 கோடியே 32 லட்சம் செலவில் 4 மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. அதில் ரூ.14 கோடியே 14 லட்சம் செலவில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. ரூ.15 கோடியே 94 லட்சம் செலவில் பஸ் நிலையத்தை நவீனப்படுத்தும் பணியும், ரூ.5 கோடியே 26 லட்சம் செலவில் மினி பஸ் நிலைய நிழற்கூடம், கூடுதல் வாகன நிறுத்தம் கட்டும் பணியும், ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் பஸ் நிலையத்தை சுற்றிலும் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையொட்டி பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மதுரை, நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் ரேக்குகளும் இடிக்கப்பட உள்ளன. இதற்காக சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வாகன நிறுத்துமிடம்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு பஸ் நிலையத்தை நவீனப்படுத்துவதற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, அங்கு புதிய வணிக வளாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நாமக்கல், மதுரை, கரூர், திருப்பூர் போன்ற ஊர்களின் பஸ்கள் நிறுத்தப்படும் ரேக்குகளின் கட்டிடமும் பழுதடைந்து உள்ளன. எனவே சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறைவு அடைந்த பிறகு கரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
மேலும், பஸ் நிலையத்தில் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. சத்திரோடு வழியாகவே பஸ்கள் உள்ளே வந்து, வெளியே செல்வதற்கும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.