ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.
ஈரோடு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில், பாரத பிரதமரின் பராமரிப்பு நிதி மூலம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிமிடத்துக்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி புதிய மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தை இயக்கி வைத்தார்.
96 சதவீதம் தூய்மை
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில், பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் 2 கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் டி.ஆர்.டி.ஓ. மூலமாக பெறப்பட்டு, எல்.என்.டி. நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டு, இந்த யூனிட்டிற்கு தேவையான கட்டிட அமைப்புகள் என்.எச்.ஏ.ஐ. மூலம் பணிகள் நடைபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அலகு மூலம் தயரிக்கப்படும், 10 லிட்டர் ஆக்சிஜன் குறைந்த பட்சம் 100 நோயாளிகளுக்கு பயன்படுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் 96 சதவீதம் தூய்மை தன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், குடும்ப நல துணை இயக்குனர் ராஜசேகர், உண்டு உறைவிட டாக்டர் கவிதா, கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மருத்துவ கல்லூரி
இதேபோல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஒரு கலன் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி கலனை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.