பா.ம.க. வேட்பாளர், அ.தி.மு.க.வில் இணைந்தார்
பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர், அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதில் பண்ருட்டி ஒன்றியம் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆதிலட்சுமி, தி.மு.க. சார்பில் ஜெயபிரியா, தே.மு.தி.க. சார்பில் ராதிகா, பா.ம.க. சார்பில் மச்சகாந்தி மணிவண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பா.ம.க. வேட்பாளர் மச்சகாந்தி, கடந்த சில நாட்களாக நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் பா.ம.க. வேட்பாளர் மச்சகாந்தி, அவரது கணவரான பா.ம.க. இளைஞரணி இணை செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். இவர்களை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சால்வை அணிவித்து வரவேற்றார்.
வாக்கு சேகரித்ததால் பரபரப்பு
இதனை தொடர்ந்து மச்சகாந்தி, அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல் குமார், தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, ஆவின் பாலுார் செல்வராஜ், வக்கீல் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மேல்அருங்குணம் கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.