தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தார்ச்சாலை வேண்டும்
தஞ்சை கணபதி நகர் வடக்கு தெருவில் மழை தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாய் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகிறார்கள். தண்ணீர் வடிய வழியின்றி தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதுவரை தார்ச்சாலை போடவில்லை. மழை காலம் என்பதால் சேறும், சகதியும் நிறைந்து வயல்வெளியாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கணபதி நகர், தஞ்சாவூர்.
சேதமடைந்த மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் மேலகபிஸ்தலத்தில் உள்ள காமராஜர் நகர் 1-வது தெருவில் மின்கம்பம் என்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது. மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனே இந்த தெருவில் செல்கின்றனர். மேலும் மழைக்காலம் என்பதால் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய துறையினர் உயிர் சேதம் ஏற்படும் முன்பு உடனடி நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வசந்தகுமார், கபிஸ்தலம்.
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பகுதி கடை தெருவில் உயர் அழுத்த மின் கோபுரம் உள்ளது. இந்த மின் கோபுரத்தில் மின் விளக்குகள் பல வருடங்களாக எரியாமல் கிடக்கிறது. கடை தெருவில் ஏராளமான கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இரவு நேரம் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ஆடுதுறை பகுதி கடை தெருவில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் மின்விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கடைதெரு, ஆடுதுறை.