திண்டுக்கல்லை 100 சதவீத தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற வேண்டும்; கலெக்டர் விசாகன் பேச்சு

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திண்டுக்கல்லை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் விசாகன் பேசினார்.

Update: 2021-10-07 20:11 GMT
திண்டுக்கல்:
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திண்டுக்கல்லை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் விசாகன் பேசினார்.
கொரோனா தடுப்பூசி 
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதற்காக தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி மற்றும் 18 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி உள்பட பிற பகுதிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் பணிகளை கலெக்டர் விசாகன் முடுக்கி விட்டுள்ளார். மேலும் கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும்படியும் உத்தரவிட்டார்.
உயிரிழப்பை தடுக்கலாம்
அதன்படி நத்தம் மற்றும் நிலக்கோட்டை அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. தடுப்பூசி செலுத்தி கொண்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம். திண்டுக்கல்லை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே 18 வயது நிரம்பியவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.
பேகம்பூர் பள்ளிவாசல்
மேலும் திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில் நடந்த கொரோனா தடுப்பூசியின் அவசியம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் பங்கேற்றார். இதில் பள்ளிவாசல் செயலாளர் கமால்பாட்சா, பொருளாளர் முகமதுஇஸ்மாயில், நாட்டாண்மை காஜாமைதீன், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்