சொகுசு கப்பலில் போதை விருந்து வழக்கு; நடிகர் ஷாருக்கான் மகனை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-07 19:56 GMT
கோப்பு படம்
மும்பை, 
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கப்பலில் போதை விருந்து
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் போதை விருந்தில் சம்மந்தப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்து இருந்தனர்.
கைதானவர்களை காவலில் எடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விசாரணை காலம் முடிந்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை நேற்று மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜா்படுத்தினர். மேலும் ஆர்யன்கான் உள்ளிட்டவர்களின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என வாதிட்டனர்.
நீதிமன்ற காவல்
எனினும் மாஜிஸ்திரேட்டு ஆர்.எம். நெர்லிகர் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். மேலும் ஆர்யன்கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல ஜாமீன் கேட்டு ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்