புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
பஸ்கள் நிற்குமா?
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி அதிகமான மக்கள் தொகை கொண்ட தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இங்கு வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-சுந்தரேசுவரன், பரவை.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் 4-வது வார்டு பகுதியில் உள்ள சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-வேலுச்சாமி, தேவகோட்டை.
மின்வெட்டு
மதுரை 21-வது வார்டு பெத்தானியாபுரத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தினமும் பல தடவை மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினகரன், பெத்தானியாபுரம்.
நீர்கசிவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆனைக்குட்டம் அணையில் நீர் கசிவு ஏற்பட்டு ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க முடியாமல் வீணாகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, சுக்கிரவாரப்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி பாக்கியலட்சுமி நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?
-மனோகரன், மதுரை.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் அதிகமாக சுற்றுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களும் அச்சத்துடன் உள்ளனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணன், ராமநாதபுரம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் கிராமத்தில் சாக்கடைகள் அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும், தெருக்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஊருக்குள் பஸ்கள், ஆம்புலன்சு எதுவும் செல்ல முடியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாப்பையா, சாப்டூர்.
பஸ் வசதி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகில் உள்ள மேப்பல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டு்களாக பஸ் வசதி கிடையாது. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள ஊர்களில் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்துரை, மேப்பல்.
ெபாதுமக்கள் அச்சம்
மதுரை ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் அங்குள்ள சாலைகளில் வாகனங்களிலும், பொதுமக்கள், நடந்தும் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது அங்குள்ள பொதுமக்களை நாய்கள் கடிப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-பொதுமக்கள், ஜீவாநகர்.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2-வது வார்டு பீ.பி. குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்களும், குழந்தைகளும் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்ற ெசயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. உடனடியாக எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், பீ.பி.குளம்.