தர்மபுரி பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.;
தர்மபுரி:
தர்மபுரி மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி கூடம்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி கூடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களை தொடங்கி வைத்தார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாக்களில் கலெக்டர் பேசியதாவது:-
கொரோனோ 3-ம் அலை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி, பென்னாகரம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பராமரித்து மக்களுக்கு தரமான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய 12 லட்சம் பேரில் இதுவரை 53 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
தடுப்பூசி
குறிப்பாக கடந்த 4 வாரங்களாக கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் மட்டும் 1,57,203 பேருக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் சிரமமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகி்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், தாசில்தார்கள் ராஜராஜன், பாலமுருகன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதன், காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், முதன்மை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா, தலைமை மருத்துவமனை டாக்டர் கனிமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஜெகதீசன், பேரூராட்சி செயல் அலுவலர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.