கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவமனைகளில் ரூ2¼ கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவமனைகளில் ரூ2¼ கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2021-10-07 18:04 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் ரூ.2¼ கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மோடி திறந்து வைத்தார் 
கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.95 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட்டு உள்ளது. இதை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி ஓசூர் அரசு மருத்துவமனை வளாக ஆக்சிஜன் உற்பத்தி இயக்கத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி, கண்காணிப்பாளர் வசந்தி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தங்கு தடையின்றி கிடைக்கும் 
நாடு முழுவதும் அரசு தலைமை மருத்துவமனைகளில் பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மையங்களை பிரதமர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலும், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.95 லட்சம் மதிப்பிலும் ஆக்சிஜன் உற்பத்தி கலனை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
ஓசூர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்