வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.;
காட்பாடி
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.
சொத்து சேர்ப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றியவர் அசோகன். இவருடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மேல் எருக்காட்டூர் ஆகும். இவர் தற்போது காட்பாடி வி.ஜி.ராவ்நகர் பி.செக்டார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் இவரை உயர்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் அசோகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வருமானத்தை விட அதிகமாக ரூ.53 லட்சத்து 50 ஆயிரம் சொத்து சேர்த்தது தெரியவந்தது
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இதனைத் தொடர்ந்து அவர் மீதும், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அவருடைய மனைவி ரேணுகாதேவி மீதும் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து நேற்று அசோகன் வசிக்கும் வி.ஜி.ராவ் நகரில் உள்ள வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, ரஜினி, விஜய் மற்றும் போலீசார் நேற்று காலை 10.30 மணிக்கு திடீர் சோதனையில் இறங்கினர். இந்த சோதனை மாலை 5 மணி வரை நடந்தது. அப்போது அவருடைய வங்கி கணக்கு விவரங்கள், அவர் வங்கி லாக்கரில் வைத்துள்ள நகைகளின் விவரங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
ஆவணங்கள் பறிமுதல்
பின்னர் அவர் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், வாகன ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோன்று மேல்எருக்காட்டூரில் உள்ள அசோகன் வீட்டில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
10 மணி நேரம் நடந்தது
மேலும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகன் எந்தெந்த விஷயங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்? என்பது குறித்து அவர்களுடைய உறவினர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் நடந்தது.