1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மினி லாரியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தேனி ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). இவரது மனைவி நிஷா (38). இவர்கள் வீட்டில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படை துணை தாசில்தார், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைத்திருந்த மினி லாரியில் மளிகை பொருட்களுடன், 25 கிலோ எடை கொண்ட 38 மூட்டைகளில் 950 கிேலா ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி என தெரியாத வகையில் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக தனியார் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜவேலை தேடி வருகின்றனர்.