வாலாஜா, ஆற்காடு, திமிரி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் அறைகளுக்கு சீல் வைப்பு
வாலாஜா, ஆற்காடு, திமிரி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
வாலாஜா, ஆற்காடு, திமிரி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. மேலும் சி.சி.டி.வி. கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சீல்வைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வாலாஜா ஒன்றியத்தில் 240 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது.
அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரிகள் அறைக்கு சீல் வைத்தனர்.
அதேபோல், ஆற்காடு ஒன்றியத்தில் 187 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து, கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
கேமரா மூலம் கண்காணிப்பு
திமிரி ஒன்றியத்தில் 226 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான கலவையில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப்பெட்டிகள் உள்ள பாதுகாப்பு அறை முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்தல் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.