வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏரி கால்வாய்களை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏரி கால்வாய்களையும் ஒரு வாரத்திற்குள் சீரமைக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏரி கால்வாய்களையும் ஒரு வாரத்திற்குள் சீரமைக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி முகாம் குறித்தும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கால்வாய்களை சீரமைக்கவேண்டும். மழைநீர், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏதும் ஏற்பட்டாதவாறு கண்காணிக்க வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து 24 மணிநேரமும் பொது மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள் மீது உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் விபரங்கள், மாவட்டத்தில் உள்ள பழைமையான கட்டடங்களின் விபரங்களை வருகின்ற திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் 100 சதவீதம் குப்பைகளை வீடுவீடாக சென்று பெற்றுகொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்.
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களையும் ஒருவாரகாலத்திற்குள் சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த பகுதியில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளது என்று கண்டறிந்து அந்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்-கலெக்டர் பி.அலர்மேல்மங்கை, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வாநாதன், அனைத்து தாசில்தார்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.